சென்னை:இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங்கில், கல்லுாரி விருப்ப பதிவு இன்று துவங்கி நாளை முடிகிறது. மாணவர்கள் கவனமாக கல்லுாரிகளை முன்னுரிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள 440 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான 'ஆன்லைன்' கவுன்சிலிங் செப்., 17ல் துவங்கியது. முதற்கட்டமாக, சிறப்பு பிரிவு மாணவர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
பொதுப்பிரிவு கவுன்சிலிங் நடவடிக்கைகள் 27ம் தேதி துவங்கின. முதல் சுற்றில் ஒன்று முதல் 14 ஆயிரத்து 788 வரை தர வரிசையில் இடம் பெற்றுள்ள மாணவர்கள் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு நேற்று மாலையுடன், கவுன்சிலிங்குக்கான வைப்புத் தொகை செலுத்தும் அவகாசம் முடிந்தது.
இதையடுத்து, இன்று கல்லுாரிகள் மற்றும் பாட பிரிவுகளுக்கான விருப்ப பதிவு துவங்க உள்ளது. மாணவர்கள் தங்களின் பயனாளர் குறியீட்டை பயன்படுத்தி, விருப்பமான கல்லுாரிகள் மற்றும் பாட பிரிவுகளைக் குறிப்பிடலாம்.இதில், தங்களுக்கு மிகவும் விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப் பிரிவை முதலில் தேர்வு செய்ய வேண்டும். அதில் இடம் இல்லை என்றால், எந்த கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு வேண்டும் என்பதை இரண்டாவதாக குறிப்பிட வேண்டும்.
இப்படி, தங்களின் விருப்ப கல்லுாரிகளை முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும் என, இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர். இந்த விருப்ப பதிவு நாளை மாலை 5:00 மணியுடன் முடிகிறது. மாணவர்களின் விருப்ப பதிவு அடிப்படையில், வரும் 3ம் தேதி உத்தேச ஒதுக்கீடு வழங்கப்படும். அந்த ஒதுக்கீட்டை மாணவர்கள் உறுதி செய்ய 4ம் தேதி மாலை 5:00 மணி வரை அவகாசம் உள்ளது.
உறுதி அளித்த மாணவர்களுக்கு மட்டும் 5ம் தேதி இறுதி ஒதுக்கீடு வழங்கப்படும். இந்த விருப்ப பதிவுக்கான ஆன்லைன் நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் எழுந்தால், இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டியின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு மாணவர்கள் நேரில் செல்லலாம். மேலும், அதில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும் விளக்கம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment