தமிழ் வழியில் போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு – அரசுக்கு கோரிக்கை - Daily Dhuniya

Breaking

Friday, September 3, 2021

தமிழ் வழியில் போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு – அரசுக்கு கோரிக்கை

தமிழகத்தில் தமிழ் மொழியில் போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் படித்ததற்கான 20 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இட ஒதுக்கீடு:

தமிழகத்தில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு பணிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த 2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரை கிளையின் ஆணைப்படி சில திருத்தங்களை அரசு செய்துள்ளது. வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியானது 10 ஆம்‌ வகுப்பாக இருப்பின்‌ 10 ஆம்‌ வகுப்பு வரை தமிழ்‌வழி கல்வியில்‌ பயின்றிருக்க வேண்டும்‌. வரையறுக்கப்பட்ட கல்வித்‌ தகுதியானது பட்டப்‌ படிப்பாக இருப்பின்‌ 10 ஆம்‌ வகுப்பு மேல்நிலை வகுப்பு மற்றும்‌ பட்டப்‌ படிப்பினை தமிழ்‌ வழி கல்வியில்‌ பயின்றிருக்க வேண்டும்‌ என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

மேலும் இதர மொழிகளை பயிற்று மொழியாக கொண்டு பயின்று, தேர்வுகளை மட்டும்‌ தமிழில்‌ எழுதியவர்கள்‌, இட ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள்‌ இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த 20 சதவீத இடஒதுக்கீட்டை சிலர் முறைகேடாக பயன்படுத்துவதால் தொடக்க கல்வி முதல் அனைத்தையும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும்படி சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தியது. அதனால் கடந்த 2020ல் அதிமுக அரசு சட்டத் திருத்தம் செய்தது.

அதன் பிறகு புதிய வழிகாட்டு விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த காலங்களில் தமிழ் மொழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டில் வேலை பெற்றவர்களில் பாதி பேர் ஆங்கில வழியில் போட்டித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள். அதனால் இனி வரும் காலங்களில் போட்டித் தேர்வுகளையும் தமிழில் எழுதுபவர்களுக்கு மட்டுமே தமிழ் வழிக் கல்விக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment