இரண்டு ஆண்டுகளுக்கு பின் பள்ளிகளில் முழு பாடத் திட்டம் அமல் - Daily Dhuniya

Breaking

Tuesday, June 14, 2022

இரண்டு ஆண்டுகளுக்கு பின் பள்ளிகளில் முழு பாடத் திட்டம் அமல்

இரண்டு ஆண்டுகளுக்குப் பின், தமிழக பள்ளிகளில் முழுமையான பாடத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

கடந்த, 2020ம் ஆண்டில், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியதில், ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டன. ஊரடங்கு காலகட்டத்தில், பள்ளி, கல்லுாரிகளில், சில மாதங்கள் நேரடியாகவும், பல மாதங்கள் 'ஆன்லைன்' வழியிலும் பாடங்கள் நடத்தப்பட்டன. பள்ளிகளுக்கு அதிகளவில் விடுமுறை விடப்பட்டதால், பாடத் திட்டத்தின் அளவு குறைக்கப்பட்டது. அதன்படி, வழக்கமான பாடத் திட்டத்தில், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 50 சதவீதம்; 9ம் வகுப்புக்கு, 38; 10ம் வகுப்புக்கு, 39; பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 35 சதவீதம் பாடங்கள் குறைக்கப்பட்டன.
இதன் அடிப்படையில், பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டன. நடப்பு கல்வி ஆண்டில், கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி, வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில், மாணவர்களிடம் முழு கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதையடுத்து, கொரோனாவுக்கு முந்தைய நிலையில் இருந்தபடியே, பாடத் திட்டமும் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் என, பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஒன்று முதல் பிளஸ் 2 வரை, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், 2019- - 20ம் கல்வி ஆண்டில் அமலான முழு பாடத் திட்டம் மற்றும் பாடங்கள், நடப்பு கல்வி ஆண்டிலும் நடத்தப்படும் என்றும், தற்போதைய நிலையில் பாடத் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment