துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கண்டனம் - Daily Dhuniya

Breaking

Sunday, October 3, 2021

துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கண்டனம்

தவறு செய்தோருக்கு எதிராக, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கத் தவறும் அதிகாரிகளுக்கு, பதவி உயர்வு வழங்காமல், பழைய பதவிக்கே திருப்பி அனுப்பும்படி, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்து உள்ளது.

போலீஸ் துறையில் பணியாற்றிய பாஸ்கரன் என்பவர், 1,500 ரூபாய் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டதால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். 2014 ஏப்ரலில் இந்த சம்பவம் நடந்தது.இதையடுத்து, பாஸ்கரனுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை; சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கவில்லை. உத்தரவு

இந்நிலையில், இவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டார்.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் கூடுதல் டி.ஜி.பி., மற்றும் மதுரை போலீஸ் கமிஷனர் மேல்முறையீடு செய்தனர்.

இதை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், நக்கீரன் அடங்கியஅமர்வு பிறப்பித்த உத்தரவு:சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி, துறை விசாரணைக்கான நடவடிக்கை எடுக்கப்படாததால், அவரை பணியில் அமர்த்த உத்தரவிட்டுள்ளார். சட்டத்தின் பார்வையிலும், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் அது சரி தான்.எனவே, தனி நீதிபதியின் உத்தரவில் குறுக்கிட விரும்பவில்லை. சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, நவம்பர் இறுதிக்குள் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். பாஸ்கரனுக்கு எதிராக துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பது என்பது மனுதாரர்களைப் பொறுத்தது.ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி, தினசரி அடிப்படையில் விசாரணை நடத்தி, ஆறு மாதங்களுக்குள் முடிவுக்கு வர வேண்டும்.

விசாரணைக்கு வர மறுத்தால், ஒரு தரப்பு விசாரணையை முடித்து, மனுதாரருக்கு முடிவை தெரியப்படுத்த வேண்டும்.தவறு செய்த ஊழியருக்கு எதிராக, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கத் தவறும் அதிகாரிகளின் பணி பதிவேட்டில், எதிர்மறையாக குறிப்பிட வேண்டும்.

சுற்றறிக்கை

அவருக்கு மேற்கொண்டு பதவி உயர்வு வழங்காமல், பழைய பதவியில் திருப்பி அமர்த்த வேண்டும். குறைந்தபட்ச தண்டனையாக இதைக் கருத வேண்டும்.

லஞ்சம் கேட்பது தற்போது வாடிக்கையாகி விட்டது; வருவாய், பத்திரப்பதிவு, மாநகராட்சி என பெரும்பாலான துறைகளில் லஞ்சம் நிலவி வருகிறது. ஊழலின் வேர், கிளை விட்டு பரவி உள்ளது. கரையான் போல் சமூகத்தைப் பாதிக்கிறது.துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளுக்கு, விசாரணையின் தீவிரத்தை உணர்த்த வேண்டும். பொறுப்பில் இருந்து தவறினால் விளைவுகள் என்ன என்பதையும் உணர்த்த வேண்டும்.சாதாரண சஸ்பெண்டுக்கும், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் ஆவதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தி, பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை குறிப்பிட்டு, அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கையை, தலைமை செயலர் மற்றும் டி.ஜி.பி., அனுப்ப வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்

No comments:

Post a Comment