சென்னை:நான்கு ஆண்டுகளுக்கு முன் நடந்த பாலிடெக்னிக் ஆசிரியர் பணி தேர்வில், விடைத்தாள் மற்றும் மதிப்பெண் பட்டியலில் மோசடி செய்ததாக, 53 இன்ஜினியர்கள் உட்பட 66 பேர் போட்டித் தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,060 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில் 2017 ஜூலையில் அறிவிப்பு வெளியானது. அதே ஆண்டு, செப்., 16ல் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் 1.30 லட்சம் பேர் பங்கேற்றனர்.தேர்ச்சி முடிவு 2017, நவ., 7ல் வெளியானது. ஒரு இடத்துக்கு இருவர் வீதம் 2,120 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தேர்வு மதிப்பெண் பட்டியலில் குளறுபடி நடந்துள்ளதாகவும், சரிவர பதில் எழுதாதவர்களுக்கு அதிக மதிப்பெண் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் புகார் எழுந்தது.
வழக்கு
இது குறித்து, டி.ஆர்.பி., விசாரணை நடத்தியதில், மதிப்பெண் பட்டியல் மற்றும் விடைத்தாளில் மோசடிகள் செய்து, 200க்கும் மேற்பட்டோர், அதிக மதிப்பெண் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து, தேர்வு முடிவுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.சென்னை போலீஸ் குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. போட்டித் தேர்வு பணியில் ஈடுபட்ட கணினி இன்ஜினியர் உள்ளிட்ட, பள்ளிக் கல்வி ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
மோசடியில் ஈடுபட்டதாக 196 பட்டதாரிகள், போட்டித் தேர்வை எழுத ஆயுள் தடை விதிக்கப் பட்டது. அவர்களின் முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது.
தேர்வு ரத்து
இது குறித்த வழக்கில், தேர்வை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, டி.ஆர்.பி., தாக்கல் செய்த மனு விசாரிக்கப் பட்டு, புதிதாக தேர்வு நடத்துமாறு 2019, ஆக., 8ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.பின்னர், மறு தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு, 2020 ஜன., 22 முதல் பிப்., 12 வரை புதிதாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த மாதம் 28 முதல் 30ம் தேதி வரை, கணினி வழியில் மறு தேர்வு நடத்தப்பட உள்ளது.
நீளும் மோசடி பட்டியல்
இந்நிலையில், போட்டி தேர்வுக்கான ஆயுள் கால தடை பட்டியலில், மேலும் 66 பேரை சேர்த்து, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசின் ஆவணங்கள், மதிப்பெண் பட்டியல், விடைத்தாள் ஆகியவற்றை திருத்தி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்த பட்டியலில் 53 இன்ஜினியர்கள் 13 பி.எஸ்சி., பட்டதாரிகள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 26 பேர் பெண்கள்.
இது குறித்து, தமிழ்நாடு தனியார் கல்லுாரி பணியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் கார்த்தி கூறுகையில்,''இந்த மாதம் மறுதேர்வு நடக்கும் நிலையில், புதிதாக பட்டியல் அறிவித்திருப்பது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நம்பகத்தன்மையை குறைப்பதாக உள்ளது. ''இந்த விவகாரத்தில், இன்னும் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர் என்பதை கண்டறிய வேண்டும்; குற்றவியல் விசாரணை முடிந்த பின் தேர்வு நடத்த வேண்டும்,'' என்றார்.
Saturday, October 2, 2021
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு மோசடி செய்த 66 பேருக்கு தடை
Tags
# Corruptions
# Exams
# TRB
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
TRB
Tags:
Corruptions,
Exams,
TRB
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment