குழந்தைகளுக்கு தொடக்க கல்வி சிறப்பாக வழங்க முதல்வர் உறுதி - Daily Dhuniya

Breaking

Wednesday, June 15, 2022

குழந்தைகளுக்கு தொடக்க கல்வி சிறப்பாக வழங்க முதல்வர் உறுதி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், எண்ணும், எழுத்தும் திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், ''குழந்தைகளுக்கு தொடக்க கல்வி மிகச் சரியாக கிடைத்தால், அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமையும்,'' என பேசினார்.

சென்னை, செங்குன்றம் அடுத்த அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் உள்ள, புழல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தமிழக அரசின் எண்ணும், எழுத்தும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முதன்மை செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திட்டத்தை துவக்கி வைத்து காணொலி, செயலி, பிரசார பாடல் ஆகியவற்றை வெளியிட்டு, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

'எண்ணும், எழுத்தும் கண்ணெனத்தகும்' என்ற தமிழ் மூதாட்டி அவ்வையாரின் பொன்மொழிக்கு ஏற்ற வழியில், கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நமது அரசு, கல்வித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கொரோனா ஊரடங்கால், பள்ளிகள், ஒன்றரை ஆண்டுகள் மூடப்பட்டிருந்தன. அதனால், மாணவர்கள், பள்ளிக்கு சென்று, நேரடி வகுப்புகளில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த இடைவெளியை ஈடு செய்யும் வகையில்தான், இந்த திட்டம் உயர்மட்ட குழுவினரின் மேற்பார்வையில் செயல்படுத்தப்படுகிறது. இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம், 'ரீடிங் மாரத்தான்' என்கிற, தொடர் வாசிப்பு இயக்கம், ஜூன், 1 முதல், 12ம் தேதி வரை நடந்தது. அதில், கலந்து கொண்ட, 16 லட்சம் மாணவ - மாணவியர், கூகுள் நிறுவனத்தின், 'ரீட் அலார்ம்' செயலி மூலம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், 200 கோடி சொற்களில், 81.4 லட்சம் கதைகளை, 7.4 லட்சம் மணி நேரம் வாசித்து, சாதனை நிகழ்த்தி உள்ளனர்.

வழக்கமான கல்வி முறை போதாது என்பதால் ஆடல், பாடல், கதை சொல்லுதல் மற்றும் பொம்மலாட்டம் என்ற புதிய யுக்தியுடன், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதனால், குழந்தைகள் உற்சாகமான மனநிலையில் தொடக்க கல்வியை எளிதாக கற்பர். வரும், 2028ம் ஆண்டுக்குள், தமிழகத்தில், 8 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும், பிழையின்றி எழுதவும், படிக்கவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது, நமது இலக்கு. மேலும், 2023ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து, மூன்று ஆண்டுக்கு, 1,2,3 ம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு ஏற்ற வகையில், வகுப்பறைகளும் மேம்படுத்தப்படும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment