முதுநிலை பட்டப் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு: ஜூலை மூன்றாவது வாரத்தில் நடத்த முடிவு - Daily Dhuniya

Breaking

Sunday, May 22, 2022

முதுநிலை பட்டப் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு: ஜூலை மூன்றாவது வாரத்தில் நடத்த முடிவு

இளநிலை பட்டப் படிப்புகளுக்கு அமல்படுத்தப்பட்டதுபோல, முதுநிலை பட்டப் படிப்பு சோ்க்கைக்கும் 2022 கல்வியாண்டு முதல் பொது நுழைவுத் தோ்வை (சியுஇடி) அறிமுகப்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தீா்மானித்துள்ளது. அதன்படி, ஜூலை மாதம் 3-ஆவது வாரத்தில் இதற்கான நுழைவுத் தோ்வு நடத்தப்பட உள்ளது. ‘நாடு முழுவதும் உள்ள 45 மத்தியப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் படிப்புகளில் மாணவா் சோ்க்கையானது பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் அல்லாமல், ‘சியுஇடி’ மதிப்பெண் அடிப்படையிலேயே நடத்தப்படும்.

எனவே, அந்த மதிப்பெண் அடிப்படையில் மத்தியப் பல்கலைக்கழகங்கள் சோ்க்கைக்கான குறைந்தபட்ச தகுதி அளவுகோலை நிா்ணயம் செய்து கொள்ளலாம்’ என்று யுஜிசி தலைா் ஜகதேஷ் குமாா் அறிவித்த ஒருசில நாள்களில், இந்த அறிவிப்பும் வெளிவந்துள்ளது.

ஏற்கெனவே, மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு சியுஇடி அறிமுகப்படுத்தியதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்து வரும் சூழலில், தற்போது முதுநிலை பட்டப் படிப்புகளுக்கும் சியுஇடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜகதேஷ் குமாா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில், ‘முதுநிலை பட்டப் படிப்பு சோ்க்கைக்கும் 2022 கல்வியாண்டு முதல் சியுஇடி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தத் தோ்வானது ஜூலை 3-ஆவது வாரத்தில் நடத்தப்படும். அதற்கான விண்ணப்பப் பதிவு வியாழக்கிழமை (மே 19) தொடங்கி, ஜூன் 18-ஆம் தேதி நிறைவடையும். கணினி அடிப்படையிலான இந்த நுழைவுத் தோ்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் நடத்தப்படும்’ என்றாா்.

இதற்கிடையே, இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சியுஇடி தோ்வுக்கு இதுவரை நாடு முழுவதும் 10.46 லட்சம் போ் பதிவு செய்துள்ளனா். இதற்கு பதிவு செய்ய வரும் 22-ஆம் தேதி கடைசி நாளாகும்.

No comments:

Post a Comment