பெற்றோர் ஆசிரியர் கழக இணைப்பு கட்டணமாக 50 ரூபாய்க்கு மேல் கூடுதலாக விண்ணப்ப கட்டணம் வசூலிக்க கூடாது: பள்ளிகளுக்கு அறிவுறுத்த அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு - Daily Dhuniya

Breaking

Sunday, June 27, 2021

பெற்றோர் ஆசிரியர் கழக இணைப்பு கட்டணமாக 50 ரூபாய்க்கு மேல் கூடுதலாக விண்ணப்ப கட்டணம் வசூலிக்க கூடாது: பள்ளிகளுக்கு அறிவுறுத்த அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக இணைப்பு கட்டணம் 50 ரூபாயை விட கூடுதலாக விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அனைத்து அரசு பள்ளிகளுக்கு அறிவுறுத்தும்படி பள்ளிக்கல்வித் துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், அறிவுறுத்தலை மீறும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக உள்ள முரளிதரன் தாக்கல் செய்துள்ள மனுவில், அரசு பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழக இணைப்பு கட்டணமான 50 ரூபாயை தவிர, கூடுதல் தொகையை மாணவர்களிடம் வசூலிக்க கூடாது என்று கடந்த ஜூன் 18ம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், அதை மீறி, பள்ளி தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன், ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் தலா 100 ரூபாய் வசூலிக்கிறார். இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கூடுதல் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அவ்வாறு வசூலித்த தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், மனுதாரர் முரளிதரன் அனுப்பியதாக பள்ளிக் கல்வித் துறை ஆணையரிடமோ, செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலரிடமோ எந்த மனுவும் இல்லை. அதேசமயம் பெற்றோர் தரப்பிலிருந்து தலைமை ஆசிரியைக்கு எதிராக புகார் வந்திருந்தால் உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்து முரளிதரனை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மனுதாரர் முரளிதரன் தாக்கல் செய்த வழக்கில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதி, தலைமை ஆசிரியை மீதான புகார் மனுவை பள்ளிக்கல்வித் துறை ஆணையரிடம் ஒரு வாரத்தில் மனுதாரர் கொடுக்க வேண்டும். அதன்மீது மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் . கூடுதல் விண்ணப்பக் கட்டணம் தொடர்பான இந்த வழக்கையும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் இருந்து நீக்கியதை எதிர்த்த வழக்கையும் ஒன்றாக பட்டியலிட வேண்டும்.விசாரணையை ஜூலை 14 தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

பெற்றோர் ஆசிரியர் சங்க இணைப்பு கட்டணமான 50 ரூபாயை தவிர கூடுதல் எதையும் வசூலிக்கக் கூடாது என்று அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவுறுத்தல் வழங்க வேண்டும். அறிவுறுத்தலை மீறும் மீது தலைமை ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 14ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment