பள்ளிகளில் சிறப்பு மையங்கள் அமைக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - Daily Dhuniya

Breaking

Tuesday, April 12, 2022

பள்ளிகளில் சிறப்பு மையங்கள் அமைக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்கள் குறித்து ஆலோசனை வழங்க பள்ளிகளில் சிறப்பு மையங்கள் அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரையை சேர்ந்த இரு பெண்கள், நட்புடன் பழகத் தொடங்கி, பின்னர் அது காதலாக மாறியதால், பிரிய மனமில்லாமல் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர். இந்நிலையில், இருவரையும் காணவில்லை என்று அவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில் தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு காவல்துறை வழங்க உத்தரவிடக்கோரியும் இரு பெண்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கில் நடத்தை விதிகளில் புதிய விதியை கொண்டுவர வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரசேகரன், இந்தியா முழுவதும் 8 சதவிகிதம் பேர் அதாவது 10 கோடி பேர் மூன்றாம் பாலினத்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதிய பாதுகாப்பு என்பது சமுதாயத்தில் இல்லை. அதனால், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது போல மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்க வேண்டும். இட ஒதுக்கீடு கிடைத்தால் வேலை வாய்ப்பு பெருகி பாலியல் தொழிலில் ஈடுபடுவது குறைக்கப்படும்.

மூன்றாம் பாலினத்தவர்கள் பிரச்னைகள் குறித்து வருங்கால தலைமுறையினருக்கு புரிதல் ஏற்படும் வகையில் மருத்துவர்கள், என்.ஜி.ஓ, அரசு சார்பில் 96 வழக்கறிஞர்களுக்கு பயிற்சிகள் ஏப்ரல் 9ல் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பிரச்னைகள் குறித்து பெற்றோர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மூன்றாம் பாலினத்தவர்களுக்கான வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் இதுவரை 12 சங்கங்கள் மூன்றாம் பாலினத்தவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் 1 சங்கம் மட்டுமே தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பாதுகாப்பு குறைபாடு காரணமாக, இளம்வயதில் உரிய ஆலோசனைகள் கிடைக்காமல் தற்கொலைகள் அதிகரிக்கின்றன. 8 வயது முதல் சமுதாயத்தால் ஒதுக்கப்படும் மூன்றாம் பாலினத்தவர்கள் வேலைகள் கிடைக்காமல் விபச்சாரத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்து அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே புரிதல் ஏற்பட வேண்டும். பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் உடல்ரீதியான மாறுதல்களை தெரிவிக்க ஏதுவாக பள்ளிக்கூடத்திற்கு 1 ஆசிரியரை ஆலோசகராக உருவாக்க வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இளம் வயதில் மூன்றாம் பாலினத்தவர்களுடன் இணக்கமான சூழல் ஏற்பட்டு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்த முடியும். அதனால், பள்ளிக்கூடங்களில் ஆலோசனை மையங்களை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஜூன் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment