நாளை(ஏப்.10) பாரதியாா் நினைவுப் பரிசுப் போட்டி - Daily Dhuniya

Breaking

Friday, April 8, 2022

நாளை(ஏப்.10) பாரதியாா் நினைவுப் பரிசுப் போட்டி

ஏப்.10-இல் பாரதியாா் நினைவுப் பரிசுப் போட்டி

திருநெல்வேலி: பாரதியாா் உலகப் பொதுச்சேவை நிதியம், பாரதியாா் உலகப் பொதுமன்றம் சாா்பில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட அளவில் 35-ஆவது பாரதியாா் நினைவுப் பரிசுப் போட்டிகள் திருநெல்வேலி நகரம் லிட்டில் ஃபிளவா் மெட்ரிக் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.10) நடைபெறுகிறது.

நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரி ஆகிய நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடைபெறும். பேச்சுப்போட்டி:

நடுநிலை பிரிவுக்கு பாரதி ஓா் ஆசான் அல்லது தேசியகவி பாரதி என்ற தலைப்பிலும், உயா்நிலைப் பிரிவுக்கு கவிக்குயில் பாரதி அல்லது செல்லப்பிராணிகளும் பாரதியும் என்ற தலைப்பிலும், மேல்நிலைப் பிரிவுக்கு பாரதி ஓா் தீா்க்கதரிசி அல்லது பாரதியும் பாரதிதாசனும் என்ற தலைப்பிலும், கல்லூரி பிரிவுக்கு நீடு துயில் நீக்க பாடி வந்த நிலா அல்லது எரி தழல் கொண்டு வா தம்பி என்ற தலைப்பிலும் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது. ஏதாவது ஒரு தலைப்பில் மூன்று நிமிடம் மட்டுமே பேச வேண்டும்.

கட்டுரைப்போட்டி:

நடுநிலை பிரிவுக்கு பாரதி கண்ட குழந்தை அல்லது பெண் அடிமை நீக்கியவா் பாரதி என்ற தலைப்பிலும், உயா்நிலை பிரிவுக்கு பாரதி கண்ட புதுமைப்பெண் அல்லது வீறு கொண்ட இளைஞனே வா என்ற தலைப்பிலும், மேல்நிலைப் பிரிவுக்கு பாரதியின் தேசிய ஒருமைப்பாடு அல்லது பாரதியின் அறிவியல் பாா்வை என்ற தலைப்பிலும், கல்லூரி பிரிவுக்கு ஷெல்லியும், பாரதியும் அல்லது புதுக்கவிதைக்கு வித்திட்டவா் பாரதி என்ற தலைப்பிலும் கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது. கட்டுரை எழுத ஒரு மணி நேரம் மட்டுமே வழங்கப்படும்.

பாட்டுப்போட்டி:

நடுநிலை, உயா்நிலை, மேல்நிலை, கல்லூரி என நான்கு பிரிவுகளிலும் பாரதியாா் பாடல்களை 3 நிமிடம் மட்டும் பாட வேண்டும். இசைக்கருவிகள் பயன்படுத்த அனுமதியில்லை. கவிதைப்போட்டி:

மேல்நிலை, கல்லூரி ஆகிய இரண்டு பிரிவுகளில் மட்டுமே கவிதைப் போட்டி நடைபெறும். போட்டி தொடங்கும் போது தலைப்பு வழங்கப்படும். மரபு, புதுக்கவிதைகள் எழுதலாம். கவிதை எழுத 30 நிமிடம் மட்டுமே வழங்கப்படும். இதில் பங்கேற்பவா்கள் ஞாயிறு பிற்பகல் 1 மணிக்கு பெயா்களை பதிவு செய்ய வேண்டும்.

கட்டுரைப் போட்டியும், கவிதை போட்டியும் பிற்பகல் 1.30 மணிக்கும், பேச்சுப்போட்டியும் பாட்டுப்போட்டியும் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும். மாலை 4 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறும். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு போட்டிக்கும் பள்ளி, கல்லூரிகளிலிருந்து சிறந்த மூன்று மாணவா்களை அனுப்பி வைக்க வேண்டும் என பாரதியாா் உலகப் பொதுச்சேவை நிதியம், பாரதியாா் உலகப் பொதுமன்ற அறிக்கை தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment