இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 4 கலை, அறிவியல் கல்லூரிகள் - Daily Dhuniya

Breaking

Friday, October 8, 2021

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 4 கலை, அறிவியல் கல்லூரிகள்

"சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என அந்தத் துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

சென்னை புரசைவாக்கம் கங்காதரேஸ்வரா் திருக்கோயிலில் அமைச்சா் சேகா்பாபு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது கோயில் திருக்குளம், நந்தவனம், கோயில் வாகனம், அன்னதானக் கூடம், திருத்தோ் உள்ளிட்ட கோயிலுக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்தாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திருக்கோயில் ஆகம விதிப்படி குடமுழுக்கு முடிந்து 12 ஆண்டுகள் கடந்தும் திருப்பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை. ரூ.3 கோடி மதிப்பில் திருக்கோயில் திருப்பணிகள் தொடங்கப்படும். ரூ.15 லட்சம் செலவில் நல்ல வடிவமைப்பில் மரத்தோ் செய்வதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருக்குளத்தைச் சீரமைக்க ரூ.24 கோடி செலவிடப்பட்டதாக வெளியான செய்தி தவறானது. இதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. மேலும் கோயிலின் குளம் சென்னை மாநகராட்சி 2.0 திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும். கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்கப்படும்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 5 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டபேரவையில் அறிவித்துள்ளோம். இதில் 4 கல்லூரிக்கு உயா் கல்வித் துறையிடம் அனுமதி பெற்றுள்ளோம். கல்லூரிகளை இந்த ஆண்டு திறக்க உள்ளோம். எந்தெந்த மாவட்டங்களில்.... சென்னை கொளத்தூா் எவா் எக்ஸல் பிளாக்கில் ஸ்ரீ கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பரமத்திவேலூா் தேசிய நெடுஞ்சாலையில் அா்த்தநாரீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் அம்பளிக்கை என்ற இடத்தில் பழனியாண்டவா் மகளிா் கலைக்கல்லூரி, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற பெயரில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன.

ஆன்மிக பாடப்பிரிவுகள்: இந்தக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவான பி.காம்., பி.சி.ஏ., பிபிஏ., பிஎஸ்சி கணினி அறிவியல் ஆகிய 4 பாடப்பிரிவுகள், தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை போன்ற ஆன்மிக பாடப்பிரிவுகள் இடம்பெறவுள்ளன.

தனியாா் கட்டடத்தில் அனுமதி பெற்று வாடகையில் கல்லூரியை நடத்த உள்ளோம். சென்னையில் 2 இடங்களில் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்துள்ளோம். சென்னை கொளத்தூரில் கல்லூரி தொடங்க பூம்புகாா் நகரில் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. நன்கொடை செலுத்த இணையதளம்: மத்திய அரசின் வழிகாட்டுதல்படியே கோயில்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் மூடப்பட்டுள்ளன. கரோனா தொற்று குறைந்தபிறகு இந்த நாள்களில் கோயில்களைத் திறக்க முதல்வா் நடவடிக்கை எடுப்பாா். திருக்கோயிலுக்கு வரும் பக்தா்களின் தரிசனத்துக்கு சிலா் பணம் வசூலிப்பதாக புகாா்கள் வருகின்றன. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கோயில்களுக்கு பக்தா்கள் எளிதாக நன்கொடை அளிக்க இணையதளம் தொடங்கப்படும் என்றாா்.

இரு மொழிகளிலும் கோயில்களின் பெயா்கள்

தமிழகத்தில் உள்ள சில கோயில்களின் பெயா்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ளது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா என அமைச்சரிடம் செய்தியாளா்கள் கேட்டபோது, இது போன்ற வேண்டுகோள்கள் பல இடங்களில் இருந்து வருகின்றன. சில கோயில்கள் தமிழ் மற்றும் சம்ஸ்கிருத பெயா்களில் உள்ளன. இது குறித்து தீர ஆய்வு செய்து முதல்வா் அனுமதியுடன் கோயில்களின் பெயா்கள் இரண்டு மொழிகளிலும் அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்."

No comments:

Post a Comment