தமிழ்நாட்டில் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகளை தொடங்கி வைத்தார் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் - Daily Dhuniya

Breaking

Monday, September 5, 2022

தமிழ்நாட்டில் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகளை தொடங்கி வைத்தார் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்

தமிழ்நாட்டில் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகளை தொடங்கி வைத்தார் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்

தமிழ்நாட்டில் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகளை டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். டெல்லி வந்தபோது பள்ளிகளை பார்வையிட வேண்டும் என என்னிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களும், மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் பார்வையிட்டு, மாதிரிப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- வீதம் உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண்" திட்ட தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருகை தந்த மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை இன்று (5.9.2022) சென்னை, கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அழைத்துச் சென்று, நூலகத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் வசதிகள் குறித்து விளக்கினார்.

அண்ணா நூற்றாண்டு நூலகம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் நாள், 2010-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நூலகம் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 3.75 லட்சம் சதுரடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 8 தளங்களைக் கொண்டு அமைதுள்ளது. இந்த நூலகம் ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும். இந்நூலகத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக "உலக இணைய மின் நூலகத்துடனும்” (World Digital Library), யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. இந்நூலகத்தில் 6.2 இலட்சம் நூல்கள் உள்ளன.

இந்நூலகத்தின் ஒவ்வொரு தளமும் தனிச் சிறப்புடன் விளங்குகிறது. தரைத் தளத்தில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான பிரெய்லி பிரிவு முதல் தளத்தில் சொந்த நூல்கள் படிப்பதற்கான பிரிவு மற்றும் குழந்தைகளுக்கான பிரிவு, இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, மூன்றாவது தளத்தில் கணிணி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், உளவியல், சமூகவியல், தத்துவவியல். அறவியல், அரசியல் அறிவியல் தொடர்பான நூல்களும், நான்காவது தளத்தில் பொருளியல், சட்டம் பொது நிர்வாகம், கல்வி, வணிகவியல், மொழியியல் மற்றும் இலக்கியம் தொடர்பான நூல்களும், ஐந்தாவது தளத்தில் பொது அறிவியல், கணிதவியல் இயற்பியல் வேதியியல் உயிரியல் மற்றும் மருத்துவம் தொடர்பான நூல்களும், ஆறாவது தளத்தில் பொறியியல், வேளாண்மை, நிர்வாக மேலாண்மை, நுண்கலை மற்றும் விளையாட்டு தொடர்பான நூல்களும், ஏழாவது தளத்தில் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், வரலாறு, புவியியல் சுற்றுலா, வாழ்க்கை வரலாறு, மின்- நூலகம் ஆகியவையும், எட்டாம் தளத்தில் நிர்வாக பிரிவு மற்றும் அரிய புத்தகங்கள் பிரிவும் உள்ளது.

இத்தகைய சிறப்புமிக்க அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை இன்று அழைத்துச் சென்று, முதல் தளத்தில் உள்ள குழந்தைகள் பிரிவில் குழந்தைகளுக்கான நிகழ்வாக முனைவர் வேலு சரவணன் அவர்கள் வழங்கிய “கடல் பூதம்” நிகழ்ச்சியை பார்வையிட்டார்கள். மேலும், மாண்புமிகு தில்லி முதலமைச்சர் அவர்கள் ஆறாம் தளத்தில் உள்ள பொறியியல், வேளாண்மை பாடப்பிரிவு ஏழாம் தளத்தில் உள்ள ஓலைச் சுவடி பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டார்.

மேலும் நூலகத்தின் எட்டாம் தளத்தில் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் அவர்களுக்கு மாதிரிப் பள்ளிகள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டு, மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகம் மற்றும் இல்லம் காட்சிப்படுத்தப்பட்டன. தேடிக் கல்வி திட்டம் குறித்த குறும்படங்களும் அதனைத் தொடர்ந்து மாண்புமிகு தில்லி முதலமைச்சர் அவர்கள் அரியலூர் பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி கிருஷ்ணகிரி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களிலுள்ள மாதிரிப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி அம்மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

பின்னர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு தில்லி முதலமைச்சர் அவர்களுக்கு இல்லம் தேடிக் கல்வி திட்டம் குறித்த புகைப்பட விளக்கப் புத்தகத்தை (Coffee Table Book) வழங்கினார்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்ட பின்பு, மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், நூலகத்தின் வருகைப் பதிவேட்டில், "It's a pleasure to visit this library. Such huge collection of books and manuscripts SO well managed and kept. it's not just Tamil Nadu's pride but India's pride. Keep it up." என்று தனது கருத்தினை எழுதி கையொப்பமிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு பி.கே.சேகர்பாபு, மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் திரு. மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இ.ஆ.ப., பள்ளிக் கல்வி ஆணையர் திரு. க.நந்தகுமார். இ.ஆ.ப., ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர், திரு. இரா. சுதன் இ.ஆ.ப., பொது நூலக இயக்குநர் திரு. க.இளம்பகவத் இ.ஆ.ப., மாதிரிப்பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment