குடும்ப சூழ்நிலையால் படிக்கும் வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கான கல்வித்திட்டம் - Daily Dhuniya

Breaking

Monday, July 11, 2022

குடும்ப சூழ்நிலையால் படிக்கும் வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கான கல்வித்திட்டம்

குடும்ப சூழ்நிலைகளால் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 படிக்கும் வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கான கல்வி கற்பிக்கும் திட்டத்தை உருவாக்க அரசு முன்வர வேண்டும். இது வழக்கமாக பள்ளியில் நேரடியாக படிப்பை முடித்தவர்களின் உரிமைகளைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

பதவி இறக்கம்

தமிழக நெடுஞ்சாலைத்துறையில் சாலை ஆய்வாளராக (தரம் 2) சிலர் பணிபுரிந்தனர். இவர்கள் படித்த முன் அடிப்படை கல்வியானது (ப்ரீ பவுண்டேஷன் கோர்ஸ்) பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.,) தேர்ச்சிக்கு இணையானது இல்லை எனக்கூறி கேங் மஸ்துார் நிலைக்கு பதவி இறக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மேல்முறையீடு செய்தனர்.நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.மனுதாரர்கள் தரப்பு: மனுதாரர்கள் சாலை ஆய்வாளர் பதவி உயர்வு பெற தகுதியுடையவர்கள். தகுதியைக் கருத்தில் கொண்டு பல்வேறு தேதிகளில் பதவி உயர்வு பெற்றனர் என தெரிவித்தது.

அரசு தரப்பு: மனுதாரர்கள் முன் அடிப்படை கல்வியில் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதலில் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி அடிப்படை கல்வித் தகுதியின்படி கேங் மஸ்துாராக நியமிக்கப்பட்டனர். அப்போது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவில்லை. முன் அடிப்படை கல்வி படிப்பை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைக் கல்வி படிப்பிற்கு இணையானதாக அங்கீகரிக்க முடியாது. மனுதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி மூலம் பத்தாம் வகுப்பை முடிக்கவில்லை. பொது வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வில் முன் அடிப்படை கல்வி தேர்ச்சியை கருத்தில் கொள்ள முடியாது என தெரிவித்தது. அந்தஸ்தை பாதிக்கும்

நீதிபதிகள்: மனுதாரர்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள். இந்நிலையில் பதவி இறக்கம் செய்யப்பட்டால் அது குடும்பம், சமூகத்தில் அந்தஸ்தை பாதிக்கும். பணியில் இளையவர்களின் கீழ் பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என மனுதாரர்கள் கருதுகின்றனர். அவர்களுக்கு 2013, 2014ல் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு பெற்ற பணியிடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துள்ளனர்.

இந்நிலையில் மனுதாரர்களை பதவி இறக்கம் செய்ய முடியாது.மனுதாரர்கள் 2017 நவ., 20 க்கு முன்பே முன் அடிப்படை கல்வியை முடித்திருப்பதால், பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள். பதவி உயர்வு வழங்க வேண்டும். பதவி இறக்கம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன.பல்வேறு குடும்ப சூழ்நிலைகளால் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 படிக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட பிறகு, மனுதாரர்கள் தங்களை தகுதிபெறச் செய்ய தீவிர முயற்சி எடுத்துள்ளனர் என இந்நீதிமன்றம் கருதுகிறது. இதுபோல் வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கான கல்வி கற்பிக்கும் திட்டத்தை உருவாக்க அரசு முன்வர வேண்டும். இருப்பினும், வழக்கமாக பள்ளியில் நேரடியாக படிப்பை முடித்தவர்களின் உரிமைகளை பாதிக்காத வகையில் திட்டம் இருக்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment