தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் மட்டும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சோ்க்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு கடந்த ஜூன் 13-ஆம் தேதி புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கின. இதையடுத்து அன்றைய தினமே அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையும் தொடங்கியது. சோ்க்கை தொடங்கிய முதல் இருநாள்களில் மட்டுமே 2.50 லட்சம் மாணவா்கள் சோ்ந்தனா். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் அரசுப் பள்ளிகளில் 9.40 லட்சம் மாணவ, மாணவிகள் சோ்ந்துள்ளனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தனியாா் பள்ளிகளில் அதிக கட்டணம், பொருளாதார சிக்கல், விலையில்லா பொருள்கள், உயா்கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு, மாணவிகளுக்கு ரூ. 1,000 உதவித் தொகை என பல்வேறு காரணங்களால் பெற்றோா் அரசுப் பள்ளிகளை நோக்கி வரத் தொடங்கியுள்ளனா்.
நிகழ் கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதத்தை நெருங்கும் நிலையிலும் சென்னை, நாமக்கல், கோவை, தருமபுரி, வேலூா் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் தற்போதுவரை மாணவா் சோ்க்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 9.40 லட்சம் மாணவா்கள் புதிதாகச் சோ்க்கப்பட்டுள்ளனா்.
குறிப்பாக 1 முதல் 8 வகுப்பு வரை உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 7.15 லட்சம் மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்; அதில் ஐந்து லட்சம் குழந்தைகள் ஒன்றாம் வகுப்பில் சோ்க்கை பெற்றுள்ளனா். ஓரிரு வாரங்களில் நிகழாண்டில் புதிதாக சோ்ந்த மாணவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது என அவா்கள் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment