தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் - Daily Dhuniya

Breaking

Monday, June 20, 2022

தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

ஆலங்குடி அருகே, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வகுப்பறையில், கான்கிரீட் கூரை இடிந்து விழுந்ததில், நான்காம் வகுப்பு மாணவர் காயமடைந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, எஸ்.களபம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 38 மாணவர்களும், 10 மாணவியரும் படிக்கின்றனர்.பள்ளி முன் உள்ள மரத்தடி நிழலில், மாணவர்களுக்கு வகுப்பு நடந்து கொண்டிருந்த போது, நான்காம் வகுப்பு மாணவர் பரத், 9, வகுப்பறைக்குள் சென்றுள்ளார்.அப்போது, திடீரென வகுப்பறையின் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்ததில், மாணவனின் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக, பள்ளி ஆசிரியர் செல்வராஜ், மாணவரை பைக்கில் ஏற்றிச் சென்று, ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு சிகிச்சை பெற்ற மாணவர், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆலங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில், நுாற்றுக்கு மேற்பட்ட பள்ளி கட்டடங்கள், அங்கன்வாடி மைய கட்டடங்கள் பழுதடைந்துள்ளன.இவற்றை சீரமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மிகப்பெரிய அசம்பாவிதம் நடப்பதற்கு முன், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இந்த சம்பவம் குறித்து விசாரித்த கல்வித் துறை அதிகாரிகள், கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி, பள்ளி தலைமை ஆசிரியர் மகாலட்சுமியை சஸ்பெண்ட் செய்துஉள்ளனர்.

No comments:

Post a Comment