தேசிய மாடலை பின்பற்றி தயாராகிறது மாநில கல்வி கொள்கை - Daily Dhuniya

Breaking

Wednesday, June 15, 2022

தேசிய மாடலை பின்பற்றி தயாராகிறது மாநில கல்வி கொள்கை

தேசிய மாடலை பின்பற்றி, மாநில கல்வி கொள்கையை வகுக்க, தமிழக பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி துறை முடிவு செய்து உள்ளது.

மத்தியில் பா.ஜ., அரசு பொறுப்பேற்றதும், 2019ல், புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கப் பட்டது. எதிர்ப்பு பிரசாரம்விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி கஸ்துாரி ரங்கன் தலைமையிலான குழுவினர், இந்த கல்வி கொள்கையை இறுதி செய்தனர். பின், 2020 முதல், புதிய கல்வி கொள்கை அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் புதிய கல்வி கொள்கைக்கு, அரசியல், ஜாதி, மத சாயங்கள் பூசப்பட்டு, எதிர்ப்பு பிரசாரம் செய்யப்பட்டது. தி.மு.க., அரசு, தேசிய கல்வி கொள்கைக்கு பகிரங்க எதிர்ப்புக் கொடி பிடிக்கிறது. அதே நேரத்தில், தேசிய கல்வி கொள்கையில் உள்ள, தவிர்க்க முடியாத சில அம்சங்களை மட்டும், தமிழக அரசு சொந்த திட்டம் போல், செயல்படுத்தி வருகிறது. இதையடுத்து, தன் கூட்டணி கட்சிகளை சமாளிக்கும் வகையில், மாநில அளவில் புதிய கல்வி கொள்கை வகுக்க, ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவை, தி.மு.க., அரசு அமைத்துள்ளது. குழுவின் உறுப்பினர் செயலராக, தமிழக மெட்ரிக் பள்ளி இயக்குனர் கருப்பசாமி இடம் பெற்றுள்ளார். இந்த குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், முதல்வரை சந்தித்து பேசியுள்ளனர்.

அப்போது, முதல்வரின் தனி செயலர் உதயசந்திரன், உயர் கல்வி செயலர் கார்த்திகேயன், பள்ளிக் கல்வி செயலர் காகர்லா உஷா உடனிருந்தனர். இந்த சந்திப்புக்கு முன், கல்வி கொள்கை தொடர்பாக, அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர்.

அதாவது, மாநில கல்வி கொள்கையை மட்டுமே வைத்து, மத்திய பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தேசிய தொழிற்கல்வி பயிற்சி கவுன்சிலான என்.சி.வி.டி., மற்றும் பார் கவுன்சில் ஆப் இந்தியா, தேசிய மருத்துவ கமிஷன், இந்திய வேளாண் கல்வி கவுன்சில் உள்ளிட்டவற்றில், பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான அங்கீகாரங்களை பெற முடியாது.
ஒத்துழைப்பு தேவை

மேலும், உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு, தேசிய கல்வி கொள்கையின் விதிகளின்படியே, பாடங்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் அதிகமாக உள்ளதால், அவற்றின் மாணவர் சேர்க்கை, பட்டப்படிப்பு அங்கீகாரம், கல்வி உதவி தொகை போன்றவற்றுக்கு, மத்திய அரசின் பல்வேறு கல்வி அமைப்புகளின் ஒத்துழைப்பு தேவை.

எனவே, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை திட்டத்தின் சில அம்சங்களை, வேறு பெயரில், தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது போல், அதன் அம்சங்களை வேறு வடிவில் மாநில கல்வி கொள்கையில் இடம்பெற செய்ய வேண்டும். அதாவது, தேசிய மாடலை தழுவிய திராவிட மாடல் கொள்கையாக, மாநில கல்வி கொள்கையை அமைக்க வேண்டும் என, பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சென்னையில் முதல்வரை சந்தித்த போது, இந்த கருத்தை வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment