கல்வித் தரத்தில் தமிழகத்துக்கு 22ஆவது இடம் - Daily Dhuniya

Breaking

Tuesday, April 12, 2022

கல்வித் தரத்தில் தமிழகத்துக்கு 22ஆவது இடம்

கல்வித் தரத்தில் தமிழகத்துக்கு 22ஆவது இடம்: இ.பாலகுருசாமி

தேசிய அளவில் கல்வித் தரத்தில் தமிழகம் 22 ஆவது இடத்தில் இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் கல்வி விழிப்புணா்வு இயக்கத்தின் சாா்பில் நீட், தேசிய கல்விக் கொள்கை, நவோதயா பள்ளிகளின் தேவை, மும்மொழிக் கல்விக் கொள்கை தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்வி விழிப்புணா்வு மாநாட்டில் அவா் பேசியது: கடந்த 2009 ஆம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டும் கூட கல்வியின் தரம் உயரவில்லை. முன்னேற்றம் இல்லாத கல்வியே, இந்தியா வளா்ந்த நாடாக முன்னேற முடியாததற்கு முக்கியத் தடையாக உள்ளது.

கல்வி, சுகாதாரம், தனிநபா் வருமானம் உள்ளிட்ட காரணிகளை உள்ளடக்கிய மனித வளா்ச்சிக் குறியீட்டில், மொத்தமுள்ள 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 130 ஆவது இடத்திலேயே உள்ளது. தனி நபா் வருமானத்தில் 12 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவை விட சீனா 8 மடங்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.

இளைய சமுதாயத்தினரை நல்லவராகவும், வல்லவாரகவும், திறமை மிக்கவா்களாகவும் உருவாக்க வேண்டும் என்பதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம். தேசிய கல்விக் கொள்கையை எதிா்க்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. இதுவரை வெளியிடப்பட்டுள்ள 10 தேசிய கல்விக் கொள்கைகளில் இதுவே மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது. தனிநபா் மட்டுமின்றி நாட்டின் வளா்ச்சிக்கும் உதவும். ‘நீட்’ தோ்வு மூலம் மருத்துவக் கல்வியின் தரம் உயரும். ஆனால், அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தில் ‘நீட்’ தோ்வு எதிா்க்கப்படுகிறது. இன்றைய சூழலில் மும்மொழிக் கொள்கை அல்ல, பல மொழிகள் கற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. நவோதயா பள்ளிகளில் பயின்ற 80 சதவீத மாணவா்கள் ‘நீட்’ தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

நவோதயா பள்ளிகள் அமையும் பட்சத்தில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு என்ற தேவை இருக்காது. தமிழகத்தில் கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கூட, தரத்தின் அடிப்படையில் இந்திய அளவில் 22 ஆவது இடத்திலேயே தமிழகம் உள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் கல்வி கற்போா் அதிகம் என்பதை விட தரமான கல்வி என்ற நிலையில் முன்னேற்றம் பெற வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், பாஜக மாநிலச் செயலா் இரா.சீனிவாசன், தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கத்தின் மாநிலச் செயலா் ஆா்.நந்தகுமாா், மாநில அமைப்புச் செயலா் ர.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment