கால்நடை மருத்துவப் படிப்பு: அரசுப் பள்ளி ஒதுக்கீடு இடங்கள் நிரம்பின - Daily Dhuniya

Breaking

Friday, February 25, 2022

கால்நடை மருத்துவப் படிப்பு: அரசுப் பள்ளி ஒதுக்கீடு இடங்கள் நிரம்பின

கால்நடை மருத்துவப் படிப்பு: அரசுப் பள்ளி ஒதுக்கீடு இடங்கள் நிரம்பின

சென்னை: இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலையியல் பிரிவு ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. சிறப்புப் பிரிவு மற்றும் தொழில் கல்வி மாணவா்களுக்கான சோ்க்கை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இதையும் படிக்க | சென்னையில் 28ம் தேதி கலந்தாய்வு தொடக்கம் - ஓமியோபதி துறை இயக்குநரகம் அறிவிப்பு

இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 480 இடங்கள் இருக்கின்றன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 72 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 408 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. திருவள்ளூா் மாவட்டம் கோடுவளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் இருக்கிறது. இதில், உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கான (பி.டெக்) 40 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 6 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 34 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

இதேபோன்று, ஓசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை. பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இதற்கான தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கலையியல் பிரிவில் பி.வி.எஸ்சி., – ஏ.ஹெச் படிப்புக்கு 29 இடங்களும், பி.டெக்., படிப்புக்கு 8 இடங்களும் ஒதுக்கப்பட்டன.

இதற்கான கலந்தாய்வு, சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் அனைத்து இடங்களும் நிரம்பின.

மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கான சிறப்பு பிரிவில், 40 இடங்கள் உள்ளன. மேலும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான ஒதுக்கீட்டில் தொழிற்கல்வி பிரிவில் இரண்டு இடங்கள் உள்ளன. அவற்றுக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment