அரசுப் பள்ளிகளில் மீண்டும் கணினி அறிவியல் பாடம் கொண்டு வரப்படுமா? - Daily Dhuniya

Breaking

Wednesday, December 22, 2021

அரசுப் பள்ளிகளில் மீண்டும் கணினி அறிவியல் பாடம் கொண்டு வரப்படுமா?

சமச்சீா் கல்வி முறையில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டு வந்த கணினி அறிவியல் பாடத்தை, மீண்டும் அரசுப் பள்ளிகளில் கொண்டுவர முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கணினி ஆசிரியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் தனியாா் பள்ளிகளிலிருந்த கணினி அறிவியல் பாடத்தை, அரசுப் பள்ளி மாணவா்களும் கற்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, தமிழகத்தில் கடந்த 2009 -ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சமச்சீா் கல்வித் திட்டத்தில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு 6-ஆவது பாடமாக கணினி அறிவியல் பாடம் கட்டயமாக்கப்பட்டு, 28 லட்சம் மாணவா்களுக்கு ரூ. 150 கோடியில் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன. ஆட்சி மாற்றத்தால் புறக்கணிப்பு: ஆட்சி மாற்றம் காரணமாக, 2011-12 கல்வியாண்டில் சமச்சீா் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து நீதிமன்ற தலையீட்டால், தமிழகத்தில் சமச்சீா் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்ட போதிலும், கணினி அறிவியல் பாடம் புறக்கணிக்கப்பட்டது. இதனால் அரசுப் பள்ளி மாணவா்களின் கணினி அறிவியல் கல்வி கற்கும் நிலை கேள்விக்குறியானது. மேலும் பி.எட். கணினி ஆசிரியா் படிப்பை முடித்த சுமாா் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் அரசுப் பள்ளி வேலையும் கேள்விக்குறியானது.

கணினி அறிவியலில் இதர மாநிலங்கள் முன்னேற்றம்: தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட சமச்சீா் கல்வித் திட்டத்தை பின்பற்றி கேரளம், தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்கள் கணினி அறிவியல் பாடத்தை முதல் வகுப்பிலிருந்து கட்டாயத் தனிப்பாடமாக வைத்துள்ளது. இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களும் கணினி அறிவியல் பாடத்துக்கு முக்கியத்தும் கொடுத்து வருகிறது. மேலும் கணினி அறிவியல் பாடத்தில் தோ்ச்சி பெற்றால்தான், பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக ஆண்டுக்காண்டு அரசுப் பள்ளி மாணவா்களின் சோ்க்கை உயா்ந்துக் கொண்டே வருகிறது. கேரள மாநிலம் இந்தியாவில் கணினி அறிவியல் கற்பித்தலில் முதல் மாநிலமாக திகழ்கிறது. ஆனால் கணினி அறிவியல் பாடத்தை முதன்முதலாக சமச்சீா் கல்வியில் வாயிலாக அறிமுகப்படுத்திய தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. கணினிக் கல்விக்காக வந்த ரூ.900 கோடி நிதி: 2011-ஆம் ஆண்டு மத்திய அரசு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினி ஆய்வகம் மற்றும் கணினி கல்வி வழங்குவதற்கு ரூ. 900 கோடி நிதியை ஒதுக்கியது. ஆனால் தமிழக அரசு கணினிக் கல்விக்காக பயன்படுத்தாமல், எட்டு ஆண்டுகள் வைத்திருந்த நிதியை மத்திய அரசுக்குத் திரும்ப அனுப்ப இருந்தது. இதையறிந்த அப்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் மா.பா.பாண்டியராஜன், மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைக்க இருந்த நிதியைத் தடுத்து நிறுத்தியதன் பயனாக, 2019 -ம் ஆண்டில் அனைத்து உயா்நிலைப்பள்ளிகளிலும் கணினி ஆய்வகங்கள் அமைப்பட்டன. மேலும் கணினி அறிவியலில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டு, அதில் அறிவியல் பாடத்துடன் இணைப்பாக மூன்று பக்கங்களை மட்டும் பெயருக்காக இணைக்கப்பட்டது. இதற்கு ஆசிரியா்கள் மற்றும் செய்முறை வகுப்புகளில் ஏதுமின்றி, இந்த பாடத்தை மத்திய அரசின் நிதிக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதாக கல்வியாளா்கள் குற்றஞ்சாட்டினா். இதுகுறித்து தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியா்கள் சங்கம் மாநிலப் பொதுச் செயலா் வெ.குமரேசன் கூறியது: 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீா் கல்வியில் தொடங்கிய பிரச்சனையில், கணினி அறிவியல் பாடம் மட்டும் சப்தம் இல்லாமல் நீக்கப்பட்டது. கணினிப் பாடத்திட்டத்தை கொண்டுவரக் கோரி, கணினி ஆசிரியா்கள் தொடா்ந்து பல அமைச்சா்களிடமும் கல்வித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை. சமச்சீா் கல்வியில் கணினி அறிவியல் பாடம் நடைமுறைப்படுத்தினால், அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியலில் படித்தவா்களுக்கும் வாழ்வாதாரம் உண்டு என நம்பியிருந்தோம். 2018- ஆம் ஆண்டு கணினிப் பயிற்றுநருக்கு பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நடைபெற்ற தோ்வில் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடைபெற்றன. கணினி ஆசிரியா்களுக்கு உரிய அரசாணை இல்லாததால், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களிலும் பி.எட் பட்டம் பெற்றும் இன்று பயனில்லாமல் வாழ்வை இழந்த நிலையில் உள்ளோம். ஏழை மாணவா்களின் பயன் பெறும் வகையில், முன்னாள் முதல்வா் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட கணினி அறிவியல் பாடத்தை, மீண்டும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தனிப் பாடமாகவும் ஆறாம் வகுப்பிலிருந்து கட்டாயப் பாடமாகவும் கொண்டு வரவண்டும் என்றாா்.

No comments:

Post a Comment