சிந்தனைகள்
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தின் சரண் மாவட்டத்தில் ஜெய பிரகாஷ் நாராயண் பல்கலை செயல்பட்டு வருகிறது. இங்கு முதுநிலை அரசியல் அறிவியல் பாடத் திட்டத்தில் இருந்து, சோஷலிச சிந்தனையாளர்களான ராம் மனோகர் லோஹியா மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோரது சிந்தனைகள் அடங்கிய பாடங்கள் சமீபத்தில் நீக்கப்பட்டன.
இது குறித்து அம்மாநில கல்வி அமைச்சர் விஜய்குமார் சவுத்ரி கூறியதாவது:ராம் மனோகர் லோஹியா மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோரது சிந்தனைகள் அடங்கிய பாடங்கள் நீக்கப்பட்டதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். கல்வித்துறை கூடுதல் தலைமை செயலர் மற்றும் உயர்கல்வி துறை இயக்குனரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன். முதல்வர் நிதிஷ் குமார் தொலைபேசி வாயிலாக என்னை தொடர்பு கொண்டு தன் வருத்தத்தை தெரிவித்தார். புதிய கல்வி கொள்கை நடைமுறைக்கு வந்த பின் உருவாக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த பாடங்கள் விலக்கப்பட்டதாக பல்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மரியாதை
மாநில அரசு நிர்வாகத்துக்கு தெரியாமல் இது போன்ற மாற்றங்களை செய்யக் கூடாது. இந்திய அரசியலில் சோஷலிச சிந்தனைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.அதில் பீஹாருக்கு பெரும் பங்கு உள்ளது. மண்ணின் மைந்தரான ஜெயப்பிரகாஷ் நாராயண் மீது, மாநில மக்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பல்கலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஆர்.எஸ்.எஸ்., சிந்தனையாளரான தீனதயாள் உபாத்யாயின் சிந்தனைகள் பாட திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மற்றவர்களின் சிந்தனைகளை சேர்க்கக் கூடாது என்பது எங்கள் நோக்கமல்ல. அதே நேரம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களின் சிந்தனைகள் புறக்கணிக்கப்பட கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment