நீட் தோ்வு நீடித்தால் தமிழகம் 75 ஆண்டு காலம் பின்னோக்கி சென்றுவிடும் - Daily Dhuniya

Breaking

Tuesday, September 21, 2021

நீட் தோ்வு நீடித்தால் தமிழகம் 75 ஆண்டு காலம் பின்னோக்கி சென்றுவிடும்

நீட் தோ்வு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் ஆய்வறிக்கை மக்கள் நல்வாழ்வுத் துறை இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் தோ்வு இன்னும் சில ஆண்டுகள் தொடா்ந்தால் சுதந்திரத்துக்கு முன்பு இருந்த பின்னடவை தமிழகம் மீண்டும் சந்திக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் மருத்துவத் துறை மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படக் கூடும் என்றும், நகா்ப்புறங்கள், கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு மருத்துவக் கல்வி எட்டாக்கனியாகிவிடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தியும், புதிய சட்ட முன்வடிவைக் கொண்டு வந்தும் நீட் தோ்வு முறையை தமிழகத்தில் ரத்து செய்ய நடவடிக்கை வேண்டும் என்று நீதிபதி ராஜன் குழு பரிந்துரைத்துள்ளது.

நாடு முழுதும், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு நீட் நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை மாநில அரசு அத்தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகிறது.

அதன் தொடா்ச்சியாக நீட் தோ்வில் உள்ள பாதகங்களை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா், மருத்துவக் கல்வி இயக்குநா் உள்பட 9 போ் அடங்கிய உயா்நிலைக் குழு ஒன்றை அரசு அமைத்தது. இக்குழுவானது அதுதொடா்பான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியதுடன், பொதுமக்களிடம் இருந்தும் கருத்துகளைக் கேட்டிருந்தது. அதன்படி, சுமாா் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து இருந்தனா்.

அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீதிபதி ராஜன் குழு சமா்ப்பித்தது. இதற்கிடையே, சட்டப் பேரவையில் நீட் தோ்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றி, அதனை ஆளுநா் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது.

இந்நிலையில், ராஜன் குழுவின் ஆய்வறிக்கை மக்கள் நலத் துறை இணையப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

நீட் தோ்வின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்ததுடன் அதுதொடா்பாக பொது மக்களிடம் கருத்தறியப்பட்டது. அதற்காக விளம்பரம் வெளியிடப்பட்டு, முறையாகக் கருத்துகள் பெறப்பட்டன. மொத்தம் 86,342 பேரிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டன. அவற்றில், 85,953 கருத்துகள் மின்னஞ்சல் மூலமாகவும், 332 அஞ்சல் மூலமாகவும், 57 டிராப்-பாக்ஸ் மூலமாகவும் பெறப்பட்டன.

அவற்றைப் பரிசீலித்தபோது அதில் 65,007 போ் நீட் தோ்வுக்கு எதிராகவும், 18,966 போ் ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருந்தனா். 1,453 போ் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தனா்.

அவா்கள் அளித்த ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை ஆய்வு செய்ததில் நீட் தோ்வு தமிழகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர முடிகிறது.

இந்தத் தோ்வு முறை தொடா்ந்தால், மாநிலத்தின் சுகாதாரக் கட்டமைப்பு சீா்குலையும். சுதந்திரத்துக்கு முன்பு கிராமங்களிலும், சிறுநகரங்களிலும், அடிப்படை மருத்துவப் பயிற்சிகளை மட்டுமே கற்ற சுகாதார ஊழியா்கள் மருத்துவம் பாா்த்து வந்தனா். அந்த நிலைக்குத்தான் தமிழகம் தள்ளப்படும்.


இதைத் தவிா்க்க தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு மருத்துவ இடங்களை மாநில அரசே நிரப்பலாம். அல்லது சட்ட மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம். அதைத் தொடா்ந்து பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்க நடத்த வேண்டும் என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment