ஆசிரியர்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் - CBI files chargesheet in teacher recruitment scam case - Daily Dhuniya

Breaking

Friday, September 30, 2022

ஆசிரியர்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் - CBI files chargesheet in teacher recruitment scam case

மேற்கு வங்காளம்: ஆசிரியர்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தின் திரிணாமுல் ஆட்சியில் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தவர் பார்த்தா சாட்டர்ஜி (வயது 69). இவர் கடந்த 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மாநில கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார்.

அந்த காலகட்டத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு, ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இது குறித்து விசாரிக்க சிபிஐ-க்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது குறித்து அமலாக்கத்துறையில் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

அந்த வகையில், கொல்கத்தா நாக்தலா பகுதியில் உள்ள மந்திரி பார்த்தாவின் வீட்டில் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். பார்த்தாவின் உதவியாளரான நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் வீட்டில் இருந்து 49.80 கோடி ரூபாய் பணம், 5.20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள், நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் மேற்குவங்காள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இந்த கைதை தொடர்ந்து பார்த்தா சாட்டர்ஜியின் மந்திரி பதவி பறிக்கப்பட்டது.

மேலும், திரிணாமுல் காங்கிரசில் இருந்தும் பார்த்தா சாட்டர்ஜி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி தற்போது சிபிஐ விசாரணை காவலில் உள்ளார். இந்த வழக்கில் பார்த்தா சாட்டர்ஜி, கடந்த வாரம் ஜாமீன் மனு தாக்கல் செய்தார், ஆனால் அவரது மனுவை சிபிஐ கோர்ட்டு நிராகரித்தது. மேலும், அவரை அக்டோபர் 5-ம் தேதி வரை கோர்ட்டு காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், ஆசிரியர்கள் பணி நியமன முறைகேடு வழக்கு தொடர்பாக அலிப்பூர் கோர்ட்டில் சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், முன்னாள் கல்வி மந்திரி பார்த்தா சாட்டர்ஜி மற்றும் முன்னாள் எஸ்எஸ்சி ஆலோசகர் சாந்தி பிரசாத் சின்ஹா உட்பட 16 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment