தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி போராட்டம்! - Daily Dhuniya

Breaking

Wednesday, April 20, 2022

தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி போராட்டம்!

தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி கோத்தர் பழங்குடியின பெண்கள் போராட்டம்

ஊட்டியில் பழங்குடியின மாணவியிடம் அத்துமீறி நடந்த தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து கோத்தர் பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முத்தோரை பாலாடா பகுதியில் ஏகலைவா பழங்குடியினர் மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நீலகிரி மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த பழங்குடியின மாணவ, மாணவிகளும் தங்கி படித்து வருகின்றனர். பள்ளி விடுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என புகார்கள் இருந்து வந்தது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக கல்லக்கொரை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (58) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த மாத இறுதியில் பள்ளி வகுப்பறையில் இருந்து வெளியே வந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவரிடம், அவர் அணிந்திருந்த துப்பட்டாவை பிடித்து இழுத்து அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, பெற்றோர் உதவியுடன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் ஊட்டி ரூரல் அனைத்து மகளிர் போலீசார் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வழக்குப்பதிவு செய்து 20 நாட்களுக்கும் மேலான நிலையில் அவரை கைது செய்யாமல் போலீசார் அலட்சியமாக இருப்பதாக கூறி கோத்தர் பழங்குடியின பெண்கள் ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காவல்துறைைய கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், ‘‘தலைமையாசிரியராக இருந்த சுப்பிரமணி என்பவர், பழங்குடியின மாணவி ஒருவரிடம் அத்துமீறி நடந்துள்ளார். இது தொடர்பாக புகார் அளித்த போதும், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய தாமதம் காட்டினர். நீண்ட போராட்டத்திற்கு பின் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. இந்த தலைமை ஆசிரியர் மாணவிகள் தங்கியுள்ள விடுதிக்கு மாலை நேரங்களுக்கு செல்வது, அறைகளை எட்டி பார்ப்பது, உடை மாற்றுவது பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைதிருந்தார். தலைமை ஆசிரியர் மீது புகார் அளித்த நிலையில், பள்ளியில் உள்ள ஒரு பெண் ஆசிரியர் உட்பட சில ஆசிரியர்கள், பொய் புகார் அளித்து உள்ளீர்கள் என்று கூறி பழங்குடியின மாணவ, மாணவிகளை இழிவாகவும், சாதியை சொல்லியும் திட்டி வருகிறார்கள்.

எனவே தலைமறைவாக உள்ள தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும். இழிவாக பேசி வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்களை அழைத்து மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, கூடுதல் எஸ்பி முத்து மாணிக்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘‘தலைமறைவாக உள்ள தலைமை ஆசிரியரை 2 நாட்களில் கைது செய்யப்படுவார். பள்ளியில் பழங்குடியின மாணவ, மாணவிகளை இழிவாக பேசி வருபவர்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment