சிறுவர்களுக்குத் தத்துவக் கல்வி ஏன் அவசியம்? - Daily Dhuniya

Breaking

Friday, December 10, 2021

சிறுவர்களுக்குத் தத்துவக் கல்வி ஏன் அவசியம்?

சிறுவர்களுக்குத் தத்துவமா என்று அதிர்ச்சியில் வீழ்பவர்களுக்கு நூலை நாமாக முயன்று நியாயப்படுத்திக் காட்ட வேண்டியதில்லை. நூலின் அவசியம், அவசரம் பற்றி சுந்தர் சருக்கை சொல்வதை நாம் சுருக்கித் தரலாம்:

படிப்பது என்பது ஒரு கருத்து நம்மை எப்படி அடுத்து வரும் கருத்துக்கு அழைத்துச்செல்கிறது என்ற தர்க்கத் தடத்தைத் தெரிந்துகொள்வதுதான். சிந்தித்தல் என்பது ஒரு புள்ளியிலிருந்து அடுத்த புள்ளிக்கு நகர்வது என்றால், படிப்பதும் எழுதுவதும்கூட அதுவேதான். எல்லாவற்றையும் தொடுதல், முகர்தல் போன்ற புலன்வழிச் செயல்களால் அறிந்துகொள்கிறோம் என்றால் ஏழு, எட்டு, என்ற எண்களை முகர்ந்தோ ருசித்தோவா அறிந்துகொள்கிறோம்?

புற உலகிலிருந்து புலன் வழியாகப் பெறாத அறிவும் உள்ளுக்குள் செயல்படுகிறது. ஒரு வகுத்தல் கணக்கைச் செய்து சரியான ஈவு கண்டுபிடித்தாலும் ஒரு ஓவியத்தைப் பார்த்தாலும் அற்புதம் என்கிறோம். இந்த இரண்டு அற்புதங்கள் தரும் மகிழ்ச்சியும் ஒரே தன்மையானவையா?

நல்லவராக இருப்பது என்பது நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பது இல்லை என்று தெரியும். இருந்தாலும், நல்லவராக இருக்க முயல்கிறோம். நமக்கு இது தகாது என்று யாரும் சொல்லித்தராவிட்டாலும் நாம் இன்னொருவரைக் காயப்படுத்த மாட்டோம். அப்படியானால், உயரம், எடை போன்றே தார்மிகப் பண்புகளும் நம்மிடமே உள்ளார்ந்தவையாக இருப்பவைதான். கேள்விகளைக் கொண்டே சுந்தர் சருக்கை தர்க்க முடிவுகளுக்கு நாமாகவே வரச்செய்கிறார்.

இவை ஒவ்வொன்றும் வரலாற்றில் தனித்தனித் தத்துவ மரபுகளாகவே வளர்ந்துள்ளன. சுந்தர் சருக்கை அவற்றைக் கருத்துச் செறிவு குறையாமல் எளிமையாக்குகிறார். சிறுவர்களுக்குத் தகுந்த நூலின் மொழிநடைக்குக் குறை ஏதும் இல்லாமல் மொழிபெயர்த்திருக்கிறார்கள் த.ராஜனும், சீனிவாச ராமாநுஜமும். விவாதம் அடுத்து எந்தப் புள்ளிக்கு நகரும் என்பதை வாசிப்பவர்கள் எதிர்பார்ப்பார்கள் என்ற கற்பனைத் திறத்தோடு நூல் கட்டமைக்கப்பட்டுள்ளது. சித்திரங்களும் வடிவமைப்பும் அந்த ஓட்டத்தை உணர்வுபூர்வமாக உள்வாங்கிக்கொண்டவை. நூலுக்கு அறிமுகமாகும் சிறுவர்கள் புதிய தலைமுறையின் தொடக்கமாக இருப்பார்கள்.

- தங்க.ஜெயராமன், ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: profjayaraman@gmail.com சிறுவர்களுக்கான தத்துவம்

சுந்தர் சருக்கை

தமிழில்: த.ராஜன், சீனிவாச ராமாநுஜம்

எதிர் வெளியீடு, பொள்ளாச்சி – 642002

விலை: ரூ.300

தொடர்புக்கு: 9942511302

No comments:

Post a Comment