ஈரோடு மாவட்ட மக்கள் கவனத்திற்கு - செ.வெ.எண்:44; நாள்:16.12.2021 - Daily Dhuniya

Breaking

Thursday, December 16, 2021

ஈரோடு மாவட்ட மக்கள் கவனத்திற்கு - செ.வெ.எண்:44; நாள்:16.12.2021

செ.வெ.எண்:44

நாள்:16.12.2021

பத்திரிக்கைச் செய்தி

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பரவுதலை தடுக்கும் பொருட்டு, மக்கள் நலனை முக்கியமாகக் கொண்டு மக்களைத் தேடி மருத்துவம் வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களின் இடைவிடாது கடும் முயற்சிகளினால் அனைவருக்கும் தடுப்பூசி எனும் இலக்குடன் இல்லம் தேடி தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 18.12.2021 சனிக்கிழமை அன்று மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட உள்ளது. இந்த மாபெரும் தடுப்பூசி முகாமை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் 18.12.2021 சனிக்கிழமை அன்று அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உட்பட 478 மையங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணையாக 1,50,000 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட உள்ளது. மேலும், இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 1912 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணி செய்திடவும், 66 வாகனங்கள் முகாமிற்காக பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது புதிதாக வெளிநாடுகளில் பரவி வரும் ஓமைக்கரான் வகை கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மிகவும் அவசியம். ஆகவே, ஈரோடு மாவட்ட பொது மக்கள் 18.12.2021 சனிக்கிழமை அன்று நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அச்சமின்றி, தயக்கமின்றி தடுப்பூசியை செலுத்திக் கொண்டு கொரோனா மூன்றாம் அலையை தடுப்பது மட்டுமின்றி தங்களது இன்னுயிரையும் சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment